தமிழகத்தில் காதலனின் ஏமாற்று வேலையை உணராமல் விஷம் குடித்த இலங்கை தமிழ் சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள வாணியாறு அணை இலங்கை தமிழர்கள் முகாமில் 250-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், முகாமில் வசித்து வந்த 16 வயது சிறுமி, முள்ளிக்காடு பகுதியை சேர்ந்த குமார் (22) என்பவரை காதலித்து வந்துள்ளார். காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வந்ததால், கடந்த 13ஆம் திகதி சிறுமி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
மயங்கி கிடந்த சிறுமியை, உறவினர்கள் மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதனிடையே, சிறுமி உயிரிழப்புக்கு அவரது காதலன் குமார் தான் காரணம் என்றும், அவரை கைது செய்யக் கோரியும் சிறுமியின் உறவினர்கள் சமீபத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், 16 வயது சிறுமியை குமார் காதலித்து ஏமாற்றியுள்ளார். காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிந்ததால், இருவரும் தற்கொலை செய்துகொள்ள முடிவெடித்து, குமார் பூச்சி மருந்து வாங்கி வந்துள்ளார்.
முதலில் சிறுமி விஷத்தை குடித்த நிலையில், குமார் அதனை குடிக்காமல் ஏமாற்றி உள்ளார். இதனால் சிறுமியை ஏமாற்றிய குமார் மீது பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தும், பொலிசார் நடவடிக்கை எடுக்க வில்லை என குற்றம்சாட்டினர்.
தொடர்ந்து, தகவல் அறிந்த பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் பார்வதி மற்றும் பொலிசார், மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது, சிறுமி இறப்புக்கு காரணமான இளைஞரை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில், அவர்கள் கலைந்து சென்றார்கள்.