மகன், மருமகள் இருந்தும் ஆதரவற்றுப்போன தாய் : 5 நாட்களாக உயிர்பிரிந்தும் படுக்கையில் கிடக்கும் சடலம்..!

காஞ்சிபுரம் அருகே மகன் மற்றும் மருமகள் இருந்தும் கவனிக்கத் தவறியதால் திடகாத்திரமாக உள்ள தாய் யாருமற்ற அனாதையாக படுக்கையில் இறந்த நிலையில் ஐந்து நாட்கள் கழித்து சடலம் மீட்கப்பட்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் பெருநகராட்சி 45வது வார்டுக்கு உட்பட்ட தாயார் குளம் அண்ணாநகர் பகுதியில் சொந்த வீட்டில் வசித்து வருபவர் பால சரஸ்வதி வயது 60. இவருடைய கணவர் ராஜமாணிக்கம் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். பால சரஸ்வதிக்கு தங்கவேலு (வயது 35 ) என்ற மகன் உள்ளார்.

இவர் கார் ஆக்டிங் ஓட்டுனராக பணிபுரிகின்றார். தங்கவேலுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக முதல் மனைவி தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் இவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். தங்கவேலு இரண்டாவது திருமணம் செய்து கொண்டு தாயின் வீட்டின் அருகே வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

இரண்டாவது திருமணம் செய்து கொண்ட காரணத்தினால் தங்கவேலு மற்றும் மருமகளிடமும் பாலசரஸ்வதி பேசுவதில்லை என்று தெரிகிறது. திடகாத்திரமாக உள்ள பாலசரஸ்வதி பேருந்து நிலையம் அருகே உள்ள உணவகம் ஒன்றில் பணி செய்து தன்னைத் தானே பராமரித்துக் கொண்டு வருகிறார்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று உடல்நிலை சரியில்லை என 108 அவசர ஊர்தி மூலம் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைக்கு பெற்று, மருந்து மாத்திரைகளையும் வாங்கிக் கொண்டு ஞாயிறு அன்று வீட்டுக்கு வந்துவிட்டார். பாலசரஸ்வதியை அந்தப் பகுதியில் உள்ளவர்கள் ஞாயிற்றுக்கிழமை பார்த்து பேசி உள்ளார்கள். அதற்கு அடுத்து அவரை யாரும் பார்க்கவில்லை.

இந்நிலையில் அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அப்பகுதி மக்கள் தாலுக்கா காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர் .

தகவலின்பேரில் அங்கு வந்த காவல்துறையினர் வீட்டின் உள் அறையில் இருந்து துர்நாற்றம் வீசுவதை கண்டு அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது இரும்புக் கட்டிலில் பாலசரஸ்வதி படுத்த படுக்கையில் சடலமாக இறந்து கிடந்தார். பாலசரஸ்வதி இறந்து சுமார் ஐந்து நாட்கள் ஆகிய நிலையில் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டு உடற்கூறு பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இவரின் வீட்டின் அருகே மகன் மற்றும் மருமகள் வசித்து வந்தாலும் தாயை தனியாக தவிக்க விட்ட சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே வேதனையை அளித்துள்ளது. வீடு வரை உறவு வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ என்ற கண்ணதாசனின் பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றது. அதேபோல் தென்னையப் பெத்தா இளநீரு பிள்ளையப் பெத்தா கண்ணீரு என்ற சோகமான வரிகளும் நிழலாடுகின்றது.

Leave a Reply

Your email address will not be published.